தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.
கோடைக் காலம்தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கிய பிறகும் வெயிலின் தாக்கம் பொறுத்துக் கொள்ளும் அளவில்தான். கோடையின் தொடக்கத்திலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் கொட்டித் தீர்த்தது. பருவமழை காலத்தை போன்று பல இடங்களில் 15 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் தணிந்து இதமான சூழல் நிலவி வந்தது.
அக்னி நட்சத்திரம்இந்நிலையில் அக்னிநட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் உருவாகி பின்னர் மோக்கா என்ற புயலானது. மியான்மர் – வங்கதேசம் இடையே இந்த புயல் கரையை கடந்தது. இதனால் அந்த நாடுகள் கடுமையான சேதத்தை சந்தித்தன.
மோக்கா புயல்மோக்கா புயலுக்கு பிறகுதான் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கியது. மோக்கா புயல் காற்றில் இருந்த ஈரப்பதத்தை ஈர்த்ததும், காற்றின் திசையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுமே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க காரணம் தெரிவிக்கப்பட்டது. கூடவே அக்னி நட்சத்திரமும் சேர்ந்து கொண்டதால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை சந்தித்து வந்தன.
அக்னி நட்சத்திரம் நிறைவுஇரவு நேரங்களிலும் அனல் காற்று, புழுக்கம் என மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் மக்களை பாடாய் படுத்தி வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெற உள்ளது. இதனால் இதன் பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்த்திருந்தனர் மக்கள். ஆனால் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தாலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தப்பிக்க முடியாதா?மேலும் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் அந்த அறிவிப்பால் நொந்து போயுள்ளனர் மக்கள். அக்னி நட்சத்திரத்திற்கு பிறகும் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க முடியாதா என வேதனை அடைந்து வருகின்றனர்.