ஸ்ரீஹரிகோட்டா: நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள என்விஎஸ்-1 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
வழிகாட்டி செயற்கைக்கோளான என்விஎஸ்-01 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதற்கான கவுன்ட்டவுனை நேற்று காலை தொடங்கியது. 27.30 மணி நேர கவுன்ட்டன் முடிவில் இன்று காலை 10.42 மணிக்கு செயற்கைக்கோளை ஏந்தியவாறு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதள மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-01 செயற்கைக்கோள், இந்த வகை செயற்கைக்கோள்களில் முதன்மையானது. இது 2,232 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோளில் முதன் முதலாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. பூமி சுற்றும் திசைக்கு ஏற்ப ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் சுற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 19-வது நிமிடத்தில், அதில் இருந்து செயற்கைக்கோள் புவி வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்துவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியாக சுற்றுப்பாதையை அடுத்தடுத்து உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அளித்துள்ள தகவல்படி, ஜிஎஸ்எல்வி-எஃப்12 என்பது 15-வது ஜிஎஸ்எல்வி செலுத்து வாகனமாகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரயோஜினிக் எந்திரம் பொருத்தப்பட்ட பிறகு ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி செலுத்து வாகனத்தில் இது 9-வது வாகனமாகும்.
பின்புலம்: இந்தியாவில் தரை, கடல், வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக, ரூ.1,420 கோடியில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி,1டி, 1இ, 1எப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, முதலில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் 1-ஏ செயற்கைக்கோள் பழுதானது. அதற்கு மாற்றாக 2017-ல் ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால்,செயற்கைக்கோளை திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாததால், அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அதன்பின் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ-வுக்கு மாற்றாக 1-ஐ செயற்கைக்கோள் 2018-ல் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல, தற்போது ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
அணு கடிகாரம்: இந்த செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. என்விஎஸ்-1 செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை உடையது. அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முதல்முறையாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தரை, கடல், வான்வெளிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.