அகமதாபாத்,
நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், விருதிமன் சஹா களமிறங்கினர்.
அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த சாய் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்த சஹா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஹா 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்த நிலையில் தீபக் சஹார் பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார்.
இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்குவாட், டெவென் கான்வே களமிறங்கினர்.
3 பந்துகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆட்டம் மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கோப்பையை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் 117 பந்துகளில் 211 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.