புதுடெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை. அது துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்குள் வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”டெல்லியில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் வருத்தமானது, துரதிர்ஷ்டவசமானது. கிரிமினல்கள் அச்சமற்றவர்களாகிவிட்டனர். காவல் துறை மீதான பயம் போய்விட்டது. துணைநிலை ஆளுநர் அவர்களே, சட்டம் – ஒழுங்கு தங்கள் பொறுப்புதானே. தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார்.
அவசரச் சட்டத்துக்கு பதிலடி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இருக்கிறது என்றும், துணைநிலை ஆளுநருக்கு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் வழிகாட்டலின் கீழ் டெல்லி துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து, டெல்லி அரசின் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே இருக்கும்படியாக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, சட்டம் – ஒழுங்கு பொறுப்பை வகிக்கும் துணை நிலை ஆளுநர் அதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார் கேஜ்ரிவால். இருப்பினும் ஒரு மாநில முதல்வர் இவ்வாறாக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது என்று அவருடைய ட்வீட்டின் கீழ் பலரும் கருத்து வருகின்றனர்.
கொலையும், கைதும்: டெல்லி ரோஹிணியில் உள்ள ஷாபாத் டெய்ரி பிரிவைச் சேர்ந்தவர் ஷாஹில். அதே பகுதியைச் சேர்ந்தவர் நிக்கி (16). இவர்கள் இருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் அண்மையில் பூசல் ஏற்பட்டுள்ளது. நேற்று (மே 28) ஷாஹிலின் நண்பர் வீட்டு விசேஷத்துக்கு சென்று கொண்டிருந்த நிக்கியை தடுத்து நிறுத்திய ஷாஹில் அவரை படுகொலை செய்தார். கத்தியால் 20 முறை குத்தியும் ஆத்திரம் அடங்காமல் சிமென்ட் ஸ்லாபால் அடித்தும் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலை காட்சிகள் அனைத்தும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அவர் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிரிச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. படுகொலையில் ஈடுபட்ட நபரை போலீஸார் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். | விரிவாக வாசிக்க > டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது சிறுமிக்கு 20 முறை கத்திக் குத்து – படுகொலையை வேடிக்கைப் பார்த்த பொதுமக்கள்