சிவகங்கை: சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் காருக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரை ஆட்சியர் ஆஷா அஜித் கண்டுகொள்ளாமல் சென்றார்.
மதுரை தாசில்நகரைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவரது தந்தைக்கு சொந்தமான இடம் மானாமதுரை அருகேயுள்ள சூரக்குளம் பகுதியில் உள்ளது. ஆனால் அந்த இடத்தை முறைகேடாக வேறுநபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று மீண்டும் மனு கொடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆட்சியர் ஆஷா அஜித் காரில் வெளியே புறப்பட்டார். திடீரென அவரது கார் முன்பாக வெங்கடசுப்பிரமணியன் தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் ஆட்சியர் ஆஷா அஜித் கண்டுகொள்ளாமல் காரில் புறப்பட்டுச் சென்றார்.
அதன்பின்னர் போலீஸார் அவரை பிடித்து தூக்கினர். இதனால் அவருக்கும், போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை காவல்நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
இதேபோல் வேம்பத்தூரைச் சேர்ந்த உமாதேவி என்பவர் இடப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த போலீஸார் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.