டெல்லி:
சுய மரியாதையும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர் வீர சாவர்க்கர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவரது செயல்கள் மூலம் இன்று வரை மக்கள் மனதில் நாயகனாக அவர் வாழ்ந்து வருகிறார் எனவும் மோடி கூறினார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் ஒருவரான சாவர்க்கரின் பிறந்த நாளன்று நாடாளுமன்ற திறப்பு விழாவை வைத்ததாலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காததாலும் இந்த விழாவை காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 18 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இந்த சூழலில், நேற்று நடைபெற்ற 101-வது மான் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி ஆற்றிய உரையில் சாவர்க்கரை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது:
மிகப்பெரிய சுதந்திரப் போராளி வீர சாவர்க்கரின் பிறந்தநாளை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அவர் செய்த தியாகமும், அவர் காட்டிய துணிச்சலும் இன்று வரை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அந்தமானில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த கொடுஞ்சிறையை நான் பார்வையிட்ட நாளினை, என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது.
வீர சாவர்க்கரின் ஆளுமையே அவரது வலிமையும், பெருந்தன்மையும் தான். அவரது அஞ்சா குணமும், சுயமரியாதை மிக்க இயல்புமே பிரிட்டிஷார் கொண்டு வந்த அடிமைத்தனத்துக்கு எதிராக அவரை போராட வைத்தது. சுதந்திரத்துக்காக மட்டும் அவர் போராடவில்லை. சமத்துவத்துக்காகவும், சமூக நீதிக்காகவும் அவர் போராடியதை இன்று வரை யாரும் மறக்கவில்லை. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே சில தலைவர்களை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறது பாஜக. அதில் முக்கியமானவர் சாவர்க்கர். ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் ஒருவரான இவரை, பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் என்றும், இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்ததில் முக்கிய பங்கு உள்ளது எனவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். அதே சமயத்தில், எதிர்க்கட்சிகளோ சாவர்க்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரிட்டிஷாரிடம் பல முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலை பெற்றவர் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
குறிப்பாக, பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டு விடுதலை ஆனது மட்டுமல்லாமல் அவர்களிடமே பென்சன் வாங்கி காலத்தை தள்ளியவர் சாவர்க்கர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பேசியது பாஜகவினரை கொந்தளிக்க செய்தது.