புவனேஸ்வர்: இன்று ஒடிசா அரசியலுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் முக்கியமான நாளாகும். தேசத்தின் மிகவும் பிரபலமான வெகுஜனத் தலைவரான நவீன் பட்நாயக் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 5வது முறையாக இதே நாளில் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதால் தற்போது 5வது முறை ஆட்சியின் 4வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இவரது ஆட்சி காலத்தில் மாநிலம் வளர்ச்சியடைந்து புதிய சகாப்தத்தை எட்டியது. 20 ஆண்டுகளுக்கும் மேலான நவீன் பட்நாயக்கின் ஆட்சி, நல்ல நம்பிக்கை, வலுவான தலைமைத்துவம், கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி ஆகியவற்றின் அரசியலை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பதவியேற்றார். நாட்டிலேயே அதிக காலம் முதல்வராக இருந்தவர்களில் இவரும் ஒருவர். பெரும்பாலும் சிறந்த முதலமைச்சராக மதிப்பிடப்பட்ட நவீன், ஒடிசாவிற்கு வலுவான, நிலையான மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தை வழங்கியுள்ளார்.
நவீன் பட்நாயக் தலைமையில், ஒடிசா மாநிலமானது வளர்ச்சியின் பல்வேறு அளவுகோல்களை பூர்த்தி செய்திருக்கிறது. மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இவரது மக்களை மையமாகக் கொண்ட கொள்கை மாநில வளர்ச்சியிலும், அனைத்து துறைகளிலும் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளிலும் பிரதிபலிக்கிறது.
நவீன் பட்நாயக் 5வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் மாநிலம் கொரோனா தொற்று பாதிப்பின் சிக்கல்களை எதிர்கொள்ள தொடங்கியது. உலகமே இந்த தொற்று பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில், ஒடிசா மாநிலமும் இதனை எதிர்த்து வீரியமுடன் போராடியது. மறுபுறம் இந்த போராட்டம் மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காத வண்ணம் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசாங்கம் பார்த்துக்கொண்டது.
இப்படியாக ஒடிசா மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆட்சியின் கீழ் பல்வேறு துறைகளில் நம்பமுடியாத வளரச்சியை எட்டியுள்ளது. தற்போது மாநிலம் வலுவான பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. 2022-2023 நிதியாண்டில் தேசிய சராசரி வளர்ச்சி 7 சதவிகிதம்தான். ஆனால் ஒடிசா மாநிலம் 7.8 சதவிகித வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது. அதுபோல தேசிய அளவில் தனிநபர் வருமான விகிதம் 9.4 சதவிகிதமாகும். ஆனால் ஒடிசாவில் இது 10.9 சதவிகிதமாக இருக்கிறது.
குழுப்பணி, தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, மாற்றம் மற்றும் நேர வரம்பு என 5T-ஐ அடிப்படையாக வைத்து மாநில அரசு சிறப்பாக இயங்கி வருகிறது. அதேபோல முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாகவும் ஒடிசா மாறியிருக்கிறது. அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2022-ன் போது, பல்வேறு துறைகளுக்கு 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் கிடைத்தன. இதே 2022-2023ம் ஆண்டு இந்த முதலீடுகள் 20.1 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தன. அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதில் தேசிய அளவில் தற்போது ஒடிசாதான் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன.
மோ சர்கார் திட்டத்தின் கீழ் கல்வி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அரசு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட 5T என்பது இந்த அரசாங்கத்தின் மீது சாமானிய மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த உதவியது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க திட்டம் உயர்நிலை பள்ளி மாற்றுத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.
ரிமோட் ஏரியாக்கள் என்று சொல்லப்படும் தொலைதூர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் கூட இவ்வாறு தரம் உயர்த்தப்படும். இதன் நோக்கம் ஒன்றுதான், அதாவது உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறைகளில் திறமையான மனித வளத்தை உருவாக்குவதுதான். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் செயலாளர் வி.கே.பாண்டியனின் நேரடி மேற்பார்வையில் 6,132 உயர்நிலைப் பள்ளிகள் மூன்று கட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கல்வி துறையைத் தொடர்ந்து சுகாதாரத்துறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை எய்ம்ஸ் பிளஸ் வகை மருத்துவமனையாக மாற்றுவது, பிஜு ஸ்வஸ்த்ய கல்யாண் யோஜனா (BSKY) ஸ்மார்ட் ஹெல்த் அட்டைகளை வழங்கி, அதன் மூலம் சாமானிய மக்களும் மருத்துவ சேவையை இலவசமாக பெற உதவுவது, முக்யா மந்திரி பாயு ஸ்வஸ்திய சேவா (காற்று சுகாதார சேவைகள்) மற்றும் அமா மருத்துவமனை முயற்சி போன்றவை நவீன் பட்நாயக் ஆட்சி காலத்தில் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா (BSKY) திட்டம் மருத்துவத்துறையில் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 3.3 கோடிக்கும் அதிமானோருக்கு மருத்துவ அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 96.5 லட்சம் குடும்பங்களை கவர் செய்துள்ளது. அதேபோல 17 மாநிலங்களில் உள்ள 650க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த அட்டையை கொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
கல்வி, மருத்துவத்தில் எப்படி மாற்றங்கள் சாத்தியமாகியதோ அதேபோல ஒடிசாவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும் (E&IT) வளர்ச்சியை சாத்தியமாகியுள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அரசின் தொழில் கொள்கைகள் காரணமாக, IBM, Deloitte, Happiest Minds, PWC, Incture, Innovare Tech, Opex America, Yovant போன்ற முக்கிய IT நிறுவனங்கள் மாநிலத்தில் தொழில்களை தொடங்கியுள்ளன.
மேலும், கடந்த 4 ஆண்டுகளில், மாநிலத்தின் முக்கிய பாரம்பரிய மதத் தலங்கள் உலகத் தரம் வாய்ந்த புனித யாத்திரை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
பூரி கோயிலில் தொடங்கி, லிங்கராஜா கோயில், சண்டி கோயில், நிலமாதவ் கோயில், சரளா கோயில், சமலேஸ்வரி கோயில், தாராதாரிணி கோயில் மற்றும் பிற புகழ்பெற்ற கோயில்களையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் மாற்றிட இந்த அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்திருக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். இன்று, ஒடிசா நாட்டின் முக்கிய விளையாட்டு இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நவீன் பட்நாயக்கின் முக்கியமான தூண்களில வியைாட்டுத்துறையும் ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு ஓர் உதாரணம்தான் எஃப்ஐஎச் ஹாக்கி ஆண்கள் உலகக் கோப்பை 2023 போட்டி. இந்த போட்டி ஒடிசாவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒடிசா ரூர்கேலாவில் உலகின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமாக ‘பிர்சா முண்டா ஹாக்கி மைதானத்தை’ நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கட்டியுள்ளது. இந்த மைதானம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, விளையாட்டு போன்ற துறைகளை போலவே பெண்களுக்கான முன்னேற்றம் சார்த்த துறைக்கும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறது.
மிஷன் சக்தி இயக்கத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்க மாநில அரசு திட்டமிட்டது. எதிர்பார்த்தபடி 70 லட்சம் பெண்களின் வாழ்க்கையை இந்த திட்டம் உயர்த்தி இருக்கிறது. இந்த இயக்கத்தின் மூலம் சுமார் 6 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ. 4,973.39 கோடி நிதியை ஒதுக்க நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன் மூலம் 2022-23 முதல் 2026-27 வரை மிஷன் சக்தி இயக்கத்திற்கு நிதி பற்றாக்குறை இருக்காது
கிராம பஞ்சாயத்துகளில் அதிகாரத்தில் இருப்பவர்களில் சுமார் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள்தான். பெண்களின் அரசியல் அதிகாரம் அடிமட்ட அளவில் எதிரொலிக்கிறது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அனைத்து தேர்தல்களிலும் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆக இப்படி பல்வேறு சாதனைகளை மெற்கொண்டுள்ள பிஜு ஜனதா தளம் மாநிலத்தின் தேர்தல்களில் பெருவாரியான வெற்றிகளை பெற்றிருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் காரணம் முதலமைச்சர் நவீன் பட்நாயக்தான்.