இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காதது, தமிழ் மன்னர்களின் பாரம்பரிய அடையாளமாக திகழும் செங்கோல் பொருத்தப்பட்டது எனப் பல்வேறு சர்ச்சைகள் சுழன்ற வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக செங்கோல் வைக்கப்பட்டது நீதி பரிபாலனத்தை நிலைநாட்டும் அடையாளம் என ஒருதரப்பினரும், தமிழர்களை வசப்படுத்தும் பாஜகவின் முயற்சி என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
ப.சிதம்பரம் கருத்து
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும்,
மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறுகையில், ஆட்சியாளர்களின் நான்கு நற்பண்புகளாக மக்கள் நலன், இரக்கம், ஏழைகளை பாதுகாத்தல், நல்லாட்சி ஆகியவை இருக்கின்றன. இதில் கடைசியாக இடம்பெற்றுள்ள நல்லாட்சியை உணர்த்துவது தான் செங்கோல்.
செங்கோல் ஆட்சி
திருவள்ளுவர் கூட தனது 546வது குறளில் செங்கோல் வளையாத நீதியின் ஆட்சி அவசியம் என சுட்டிக் காட்டியுள்ளார். இதுவே நம் நாட்டின் பழம்பெருமை வாய்ந்த விஷயமாக இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் கண் கூடாக பார்த்து வருகின்றனர்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் கலவரம் வெடித்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் திரும்ப பிரதமர் ஒரு வேண்டுகோள் விடுக்காதது ஏன்?
நல்லாட்சி வேண்டும் மோடி
நீதியின் அடையாளமாக திகழும் செங்கோலை வைத்திருக்கும் பிரதமர் மோடி நல்லாட்சியை நடத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு பெரிதும் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதேபோல் பலரும் செங்கோல் குறித்து விமர்சனக் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா
முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் பலவும் புறக்கணித்துவிட்டன. இருப்பினும் விழாவை மிகவும் பிரம்மாண்டமாக மத்திய அரசு நடத்தி காட்டியுள்ளது. சிறப்பு விருந்தினர்கள், இரண்டு குறும்படங்கள் திரையிடல், பிரதமர் மோடி மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா உரை, குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் அனுப்பி வைத்த உரை ஆகிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.