செங்கோல் பற்றி விமர்சனம் செய்பவர்கள் அதன் உண்மை தன்மை புரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவிக்கையில், “புதிய நாடாளுமன்றத்தில் செங்கல் நிறுவப்பட்டு உள்ளது தமிழகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஒரு மரியாதை.
அப்படியான இந்த ஒரு நிகழ்வை தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஒரு சில அரசியல்வாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஒருவரின் ஊன்றுகோலாக இருந்த இந்த செங்கோலை இன்று பெருமைப்படுத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று விமர்சித்துள்ளார். அவர் இப்படி கூறுவது சரியில்லை.
எவ்வளவு மாற்று கருத்து இருந்தாலும் தமிழகத்தின், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்கக் கூடாது. .
நாட்டில் உள்ள எந்த மாநிலத்திற்கும், எந்த மொழிக்கும் கிடைக்காத ஒரு மரியாதை நமக்கு கிடைத்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மற்ற மாநிலத்தவர்களும் மகிழ்ச்சி கொள்கின்றனர். யாரும் எதிர்க்கவில்லை, பொறாமைப்படவில்லை, மனதாரப் பாராட்டுகின்றனர்” என்றார்.