சென்னை: தனியார் ஏஜென்சிகள் மூலம் போக்குவரத்து துறையில் ஆட்கள் சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் உள்ள 33 போக்குவரத்து பணிமனைகளில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை மாலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் ஏஜென்சிகள் மூலம், போக்குவரத்து துறையில் ஆட்கள் சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் உள்ள 33 போக்குவரத்து பணிமனைகளில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக, சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை மற்றும் ஆலந்தூர் உள்பட சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் வரும் 33 பணிமனைகளிலும் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவுட் சோர்ஸிங் முறையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஆட்கள் பணியமர்த்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம், போக்குவரத்துக் கழகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திங்கள்கிழமை மாலை நேரத்தில் நடக்கும் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக சென்னையில் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. பணிக்குச் சென்று திரும்பும் பெண்கள், இளைஞர்கள், முதியோர் உட்பட பொதுமக்கள் பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.