சென்னை, சைதாப்பேட்டை, சேஷாசலம் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் மோகன்ராஜ். நேற்றிரவு இவர் காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கினார். நள்ளிரவு வீட்டுக்குள் சத்தம் கேட்டு மோகன்ராஜ் கண்விழித்தார். அப்போது, மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நடமாடுவது மோகன்ராஜுக்குத் தெரிந்தது. உடனே உஷாரான மோகன்ராஜ், `திருடன்… திருடன்’ என்று சத்தம் போட்டார். அதனால் வீட்டிருந்து வெளியில் வந்த திருடன், அங்கிருந்து தப்பி ஓடினான். அப்போது அவன் கையில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்தது.
திருடனை மோகன்ராஜும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களும் சேர்ந்து விரட்டினர். அவர்களிடம் சிக்காமலிக்க 3-வது மாடியிலிருந்து திருடன் குதித்தான். இதில் பலத்த காயமடைந்த திருடனை, பொதுமக்கள் சுற்றிவளைத்தனர். பின்னர் சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், திருடனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திருடன் உயிரிழந்தான்.
திருடன் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் மணிகண்டன் என்றும், சைதாப்பேட்டை, கோட்டமேடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. மணிகண்டன் மீது திருட்டு வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.