கடந்தாண்டு முதன் முறையாக மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதே போன்று இந்த வருடமும் மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நடப்பாண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதன் காரணமாக வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்காக காவிரி நீர் திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 11ம் தேதி சேலம் செல்கிறார். அதன் பின்னர் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணைக்கு செல்லும் அவர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உள்ளார்.