புதுடெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்தச் சம்பவம் குறித்து துரிதமாக, நியாயமாக விசாரணை நடத்துமாறு டெல்லி காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றையும் மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் டெலினா கொன்குப்த் தலைமையிலான மூவர் குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் விசாரணை நடத்துவர். கூடவே, அவர்கள் டெல்லி காவல் துறையினரையும் சந்தித்து இந்த வழக்கை நியாயமாக, துரிதமாக விசாரிக்க் அறிவுறுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவாலும் டெல்லி சம்பவத்துக்கு ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர், “டெல்லி ஷாபாத் டெய்ரி பகுதியில் ஓர் அப்பாவி சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வரம்பற்ற வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. என் பணிக்காலத்தில் தான் பார்த்திராத அளவிலான வன்முறை இது” என்று கூறியுள்ளார்.
நடந்தது என்ன? – டெல்லி ரோஹிணியில் உள்ள ஷாபாத் டெய்ரி பிரிவைச் சேர்ந்தவர் ஷாஹில். அதே பகுதியைச் சேர்ந்தவர் நிக்கி (16). இவர்கள் இருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் அண்மையில் பூசல் ஏற்பட்டுள்ளது. நேற்று (மே 28) ஷாஹிலின் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்த நிக்கியை தடுத்து நிறுத்திய ஷாஹில் அவரை படுகொலை செய்தார். கத்தியால் 20 முறை குத்தியும் ஆத்திரம் அடங்காமல் சிமென்ட் ஸ்லாபால் அடித்தும் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலை காட்சிகள் அனைத்தும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அவர் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிரிச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. படுகொலையில் ஈடுபட்ட நபரை போலீஸார் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். | விரிவாக வாசிக்க > டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது சிறுமிக்கு 20 முறை கத்திக் குத்து – படுகொலையை வேடிக்கைப் பார்த்த பொதுமக்கள்