புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அண்மையில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி விமர்சித்துள்ளார் பாஜக பிரமுகர் கபில் மிஷ்ரா.
இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், “டெல்லியில் ஒரு வேதனை தரும் கொலை நடந்துள்ளது. ஒரு இந்துப் பெண், அதுவும் மைனர் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சர்ஃபராஸ் என்பவரின் மகன் ஷஹில் இதைச் செய்துள்ளார். இன்னும் டெல்லி தெருக்களில் எத்தனை கேளர ஸ்டோரி சம்பவங்கள் நிகழப் போகின்றனவோ?! ஷ்ரத்தா என்ற இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் இன்னொரு படுகொலை நடந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ என்பது கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட திரைப்படமாகும். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
முன்னதாக, டெல்லி ரோஹிணி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் இளைஞரால் படுகொலை செய்யப்பட்டார். சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி அவர் படுகொலை செய்துள்ளார். அந்த நபரை போலீஸார் தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்த நிலையில் தற்போது அவரை உத்தரப் பிரதேசத்தில் போலீஸர் கைது செய்துள்ளனர்.