மதுரை: மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் முத்துக்குமார் தமிழ்நாடு ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 2 ஆண்டாக குழந்தை கடத்தல் அதிகரித்துள்ளது. மதுரையில் குழந்தைகள் கடத்தலில் தனியார் அறக்கட்டளை நிர்வாகி, கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை ஏமாற்றி உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வென்றதாக பாராட்டு பெற்றுள்ளார். இதில் உளவுத் துறை சரிவர செயல்படவில்லை.
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை சோதனையிட சென்ற வருமான வரித் துறையினர் மீது தாக்குதல் நடந்துள்ளது. வருமான வரித்துறையினர் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்ள வருவது தெரியாது என, அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வருமான வரி, அமலாக்கம், என்ஐஏ, சிபிஐ போன்ற துறைகள் தமிழகத்தில் தங்களின் பணிகளை செய்ய முடியவில்லை. வருமான வரித் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு சட்டம், ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தி தற்போதைய ஆட்சியை கலைக்கவேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.