சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை கண்டித்து திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
சென்னை முழுவதும் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் 500 ஓட்டுநர்களை நாளை தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேகே நகர், அண்ணா நகர், பாரிமுனை, தாம்பரம் உள்ளிட்ட சென்னையில் உள்ள 33 பணிமனைகளுக்கு வரும் பேருந்துகளை மீண்டும் இயக்காமல் போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்தினர். இதனால் பேருந்து நிலையங்களில் மக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் உள்ள 33 பணிமனைகளிலும் பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் பொதுமக்கள் அவதிக்கு ஆளான நிலையில் போக்குவரத்து தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் மீண்டும் பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்ற போராட்டத்திற்கு தொமுச தொழிற்சங்க பிரதிநிதி நடராஜன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த நிலையில் அனைத்து தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜப்பானிலிருந்து கொடுத்த அறிவுறுத்தலின்படி உடனடியாக பேச்சுவார்த்தை துவங்க இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.