ராஜஸ்தானில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில் மணமகள் திடீரென காணாமல்போனதையடுத்து, கட்டினாள் அந்தப் பெண்ணைத்தான் கட்டுவேன் என விடாப்பிடியாக 13 நாள்கள் காத்திருந்த மணமகனுக்கு, இறுதியில் காத்திருப்பின் பலன் கிடைத்துவிட்டது.
முன்னதாக ராஜஸ்தானின் சாய்னா கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் மே 3-ம் தேதியன்று திருமணம் நடக்கவிருந்தது.
அதன்படி சரியாக திருமண நாளில் மணமகன் வீட்டார் மணப்பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். கிட்டத்தட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்துவிட்டன. இந்த நிலையில், மணமகளும், மணமகனும் மணமேடையில் ஒன்றாகச் சுற்றிவரும் சம்பிரதாயத்துக்கு முன்னர், மணப்பெண் தனக்கு வயிற்று வலி எனக் கூறிவிட்டு, வீட்டருகே உள்ள ஒரு தொட்டியின் பக்கம் சென்றிருக்கிறார்.
ஆனால், வெகுநேரமாகியும் இளம்பெண் வரவில்லை. பின்னர் இரு வீட்டாரும் மணப்பெண்ணைத் தேடத்தொடங்கினர். இறுதியில், ஏற்கெனவே காதலித்துவந்த நபருடன் இளம்பெண் சென்றுவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். இதனைக் கேட்ட மணமகன், மணமகள் திரும்ப வரும்வரை அங்கேயே இருக்க முடிவுசெய்துவிட்டார். திருமணத்துக்காகத் தலையில் அணிந்திருந்த தலைப்பாகையைக்கூட அகற்ற மறுத்துவிட்டார் அவர்.
இப்படியே 13 நாள்கள் சென்றன. மணமகளும் வரவேயில்லை. இறுதியில் ஒருவழியாக போலீஸாரின் தலையீட்டுக்குப் பிறகு மே 15-ம் தேதி மனீஷா கண்டுபிடிக்கப்பட்டு, அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதையடுத்து 13 நாள்களாகக் காத்திருந்த மணமகனுக்கே இளம்பெண் திருமணம் செய்துவைக்கப்பட்டார்.