நீர்வளத்துறை மறு சீரமைப்புக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நீர்வளத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான ஒப்பந்தங்களை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மூன்று ஆண்டு கால சீர்திருத்த திட்டத்தில் ஒருமித்த கருத்தை அடைவதே கூட்டத்தின் நோக்கமாகும். சீர்திருத்த வேலைத் திட்டமானது இலங்கையின் நீர் துறையில் உள்ள பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சீர்திருத்த முன்முயற்சி ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கணிசமான ஆதரவை பெற்றுள்ளது. சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்த பட்ஜெட் ஆதரவு உதவியாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பு சாதகமாக முடிந்துள்ளதுடன், இது ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளை இறுதி செய்வதற்கு வழிவகுத்துள்ளது என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.