மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த சில நிமிடங்களில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போருக்குப் பின்னர் உலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மோசமாகவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இதுவரை இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இதனால் உலக நாடுகளிடம் இருந்து ரஷ்யா தனித்து வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டது. சில நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தன. ஓரிரு நாடுகள் மட்டுமே உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது.
ரஷ்யா:
அப்படி ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த நாடுகளில் முக்கியமானது பெலாரஸ்.. ரஷ்யாவுடன் தொடக்கம் முதலே பெலாரஸ் இணக்கமான ஒரு உறவையே கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த சில நிமிடங்களில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் இப்போது மாஸ்கோவினல் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாக பெலராஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் வலேரி செப்கலோ தெரிவித்துள்ளார். அவர் தனது டெலிகிராம் பக்கத்தில், “எங்களுக்கு பெலராஸ் அதிபர் உடல்நிலை குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்றிரவு புதினை தனிப்பட்ட முறையில் லுகாஷென்கோ சந்தித்துள்ளார்.
உடல்நலக்குறைவு:
அதன் பின்னர் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசரமாக மாஸ்கோவின் மத்திய மருத்துவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கே தான் அவர் இப்போது அட்மிட் செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெலாரஷ்ய சர்வாதிகாரியை மீட்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ரஷ்யா அவருக்கு பாய்ஷன் கொடுத்தது என்ற தகவல் பரவுவதைத் தவிர்க்கவே ரஷ்ய மருத்துவர்கள் அவரை காப்பாற்றத் தீவிரமாக முயன்று வருகின்றனர்.. புதின் உடனான மீட்டிங்கில் அணு ஆயுதங்களைத் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடல்நிலை மோசமாக உள்ளதாகவே கடந்த சில காலமாகவே கூறப்பட்டு வருகிறது. அவர் கடந்த மே 9ஆம் தேதி ரஷ்யா வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற போதே அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், 1994 ஆம் ஆண்டு முதல் பெலாரஸ் தலைமை பொறுப்பில் உள்ள லுகாஷென்கோ இதைத் தொடர்ந்து நிராகரித்தே வந்தார்.
பதில்:
அப்போது செய்தியாளர்கள் அவரது உடல்நிலை குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கவலைப்படாதீங்க.. அவ்வளவு சீக்கிரம் நான் உயிரிழக்க மாட்டேன்” என்று விளையாட்டாகக் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் இப்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை அவருக்கு விஷம் வைத்ததாக யாரும் எந்தவொரு குற்றச்சாட்டையும் எழுப்பவில்லை.
இருப்பினும், ரஷ்யாவில் அவர் உயிரிழந்தால், அது தேவையற்ற பேச்சுகளைக் கிளப்பும் என்பதாலே ரஷ்யா மருத்துவர்கள் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.