மாஸ்கோ,
ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் கலந்து கொண்டார். இதன்பின்னர், அதிபர் புதின் மற்றும் பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ இருவரும் நேரில் சந்தித்து, பூட்டிய கதவுகளுக்கு பின்னால், ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர், மாஸ்கோ நகரிலுள்ள மத்திய கிளினிக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக லுகாஷென்கோ உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை மோசமடைந்து உள்ளது என பெலாரசில் 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளரான வேலரி செப்காலோ தெரிவித்து உள்ளார்.
எனினும், தனது குழுவினர் அளித்த இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என செப்காலோ கூறியுள்ளார் என அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிகையான நியூஸ்வீக் தெரிவிக்கின்றது.
சிறந்த மருத்துவ நிபுணர்கள் சென்று, லுகாஷென்கோவை அழைத்து வரவுள்ளனர். ரஷிய அரசு அவருக்கு விஷம் கொடுத்திருக்க கூடும் என்ற யூகங்களை தவிர்க்கும் வகையில், பெலாரஸ் சர்வாதிகாரியான லுகாஷென்கோவை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தகவல் தெரிவிக்கின்றது.
உக்ரைனுக்கு எதிரான போரில், பெலாரசில் அணு ஆயுத ஏவுகணைகளை குவிப்பதற்காக அந்நாட்டு அரசுடனான ஒப்பந்தம் ஒன்றில், ரஷியா கடந்த வாரம் கையெழுத்திட்டது என ரஷியாவில் இருந்து வெளிவரும் டாஸ் பத்திரிகை தெரிவித்து இருந்தது.