சென்னை: புதிய நாடாளுமன்றத்தை திறந்துவைத்து, செங்கோல் நிறுவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: பாரதத்தின் நீண்ட நாகரிக வளர்ச்சியைப் போற்றி, விஸ்வகுருவின் பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான நாடாளுமன்றக் கட்டிடம் வேண்டும் என்ற தேசத்தின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி.
நமது தேசத்தின் ஒளிமயமான கடந்த காலத்தையும், எழுச்சிமிக்க நிகழ்காலத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க திறப்பு விழாவை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கு நல்வாழ்த்துகள்.
புனித செங்கோலை, அதிகார மாற்ற கலாச்சாரம் மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகவும், நியாயமான ஆளுகையைத் தொடர்ந்து நினைவூட்டவும் நாடாளுமன்றத்தில் அதற்குரிய இடத்தில் வைப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டபுதிய நாடாளுமன்றத்துக்குள், எளிய சிவனடியார்கள் புடைசூழ,பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கரங்களால் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நாடாளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது.
அடியார்கள் அரசாள்வர் என்றதிருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பும், மக்கள் அரசாளும் நாடாளுமன்றத்துக்குள் ஒலிக்கிறது. ஆன்மிகத்தின் தொலைநோக்குப் பார்வையை யார் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், தமிழக மக்கள் மனதில் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணிபோல பதிந்துவிடும்.
இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் வரலாற்றுப் புகழ் சேர்த்திருக்கிறது. இதைப் புறக்கணித்தவர்கள், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் துரோகம் செய்து, பெரிய வரலாற்றுப் பிழையை செய்திருக்கிறார்கள்.
தமிழுக்கு கிடைத்த இந்தப் பெருமையை, தமிழுக்குச் சூட்டிய மகுடமாகக் கருதி, பாரதப் பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.