தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், திமுக அரசில் நிறைவேற்றப்படும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கு தேச கட்சியின் முதலாம் கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு தேச கட்சியின் மாநாடு நேற்று (மே 28) கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜ மகேந்திரபுரத்தில் நடைபெற்றது. அங்கு சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அரசுப் பேருந்தில் இலவச பயணம்!தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் இதை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கு தேச கட்சியும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளது.
மகளிருக்கு மாதம் 1500 ரூபாய்தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதை பின் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயது நிரம்பிய பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,500 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் வாக்குறுதிகள்இதுமட்டுமல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 20,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். படிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ரொக்கப் பணம்!மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றியமையாதது ஆகும். அந்த வகையில் புதிதாக 20 லட்ச வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 ரொக்கம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் அறிக்கையே கவனம் பெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டமாக என்னென்ன அறிவிப்புகளை சந்திரபாபு நாயுடு அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.