சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்கின்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு தெரிவிக்கையில், “சைபர் கிரைம் எதிர்கால குற்றங்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இதுவரை சந்திக்காத குற்றங்கள் என்பது தான் இதன் அர்த்தம்.
நாம் பயன்படுத்தக்கூடிய செல்போனை வைத்து நம்முடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை சைபர் குற்றவாளிகள் திருடிச் செல்வார்கள்.
மேட்ரிமோனி வலைத்தளம், வங்கியில் இருந்து , வேலை வாய்ப்பு, பாஸ்போர்ட் விசா வாங்கித் தருவதாக கூறி இந்த சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி, வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் இவர்களிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவேளை பொதுமக்கள் பணத்தை தவறவிட்டால், 1930 என்கின்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
சென்னையில் இருக்கும் இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பணம், வேறு ஒரு வங்கிக்கு பரிமாற்றம் செய்யப்படுவதை தடுத்து, பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கிற்கு திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இது அனைத்துமே 24 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டிய ஒரு செயல் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் பெண்களுக்கு என்று தனிப்பிரிவு உள்ளிட்ட 66 வகையான காவல்துறை செய்ய வேண்டிய பல்வேறு உதவிகள் இந்த செயலியில் உள்ளது” என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.