அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டு இன்று நடைபெறும் நிலையில், இன்றும் மழை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை பெய்ததால் போட்டி நிறுத்தபப்ட்டுள்ளது.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டனஸ் அணியும் மோதி வருகின்றன. முன்னதாக இந்த போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவக்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குஜராத் அணியின் துவக்க வீரர்கள் சுப்மான் கில்லும், சஹாவும் அபாரமாக ஆடினார்கள். அதேவேளையில் சென்னை அணியின் ஃபீல்டிங்கும் படு மோசமாக இருந்தது.
சாய்சுதர்சன் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. குஜராத் அணி சென்னைக்கு 215 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி வெறும் 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், போட்டி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.