புதுடெல்லி: ராஜஸ்தானில் ஆளும் கட்சியின் இருபெரும் தலைவர்களான அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ராஜஸ்தானில் வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான கடந்த ஆட்சியில், அரசு பணிகளை வழங்குவதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை முழுமையாக கலைத்துவிட்டு மறுசீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி வருகிறார். எனினும், அவரது கோரிக்கை ஏற்கப்படாததால், முதலில் ஜெய்ப்பூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.
நடைப்பயணத்தின் இறுதியில் தனது 3 கோரிக்கைகள் மீது அரசு இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக சச்சின் பைலட் எச்சரித்திருந்தார். ராஜஸ்தானில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கட்சிக்குள் பிரச்சினை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு இருவரிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருந்தது. அதன்படி, இருவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் இன்று டெல்லி வந்துள்ளனர். அவர்களிடம் மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல் காந்தியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் நலன் கருதி இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.