இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் மஹாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்ட ஏழு ரிஷிகளின் சிலைகள் பலத்த காற்றினால் கீழே விழுந்து தேமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலைச் சுற்றி மகாகல் லோக் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பிரதமர் மோடி கடந்தாண்டு திறந்து வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக அங்கே ஏழு சப்தரிஷிகளின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் அதைப் பார்த்துச் செல்கிறார்கள். இதற்கிடையே அங்கே எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.
விபத்து:
நேற்றைய தினம் அப்பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இதில் அங்கே வைக்கப்பட்டுள்ள 7 ரிஷி சிலைகளில் 6 சிலைகள் கீழே விழுந்து சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அப்பகுதியில் அதிகப்படியான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தார்கள். அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த விபத்து நடந்துள்ளது.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதி சில மணி நேரம் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மகாகல் லோக் வழித்தட திட்டத்தின் முதல் கட்ட பணிகள் கடந்தாண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த அக். மாதம் இதனைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்த வைத்தார்.
அங்கே இந்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், இந்தச் சம்பவத்தைக் கையில் எடுத்து காங்கிரஸ் சவுஹான் தலைமையிலான மத்தியப் பிரதேச பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது. கட்டுமான பணிகளில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டும் காங்கிரஸ், தரமற்ற பொருட்களே இந்த விபத்திற்குக் காரணம் என்றும் இதில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
என்ன நடந்தது:
இது குறித்து உஜ்ஜைன் ஆட்சியர் குமார் புர்ஷோத்தம் கூறுகையில், “மஹாகல் லோக் வழித்தடத்தில் மொத்தம் 160 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன, அவற்றில் 10 அடி உயரமுள்ள 6 ரிஷிகளின் சிலைகள் மாலை 4 மணியளவில் பலத்த காற்று வீசியதால் கீழே விழுந்தன. இதையடுத்து அந்த பாதை உடனடியாக மூடப்பட்டது. இருப்பினும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் அது திறக்கப்பட்டது. அப்போது ஏராளமான பார்வையாளர்கள் அங்கு குவிந்தனர்.
கீழே விழுந்து சேதமடைந்த சிலைகள் மஹாகாலேஷ்வர் கோவிலுக்குள் இல்லை. அதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மஹாகல் லோக் வழித்தடத்தில் இருந்தவை தான் கீழே விழுந்துள்ளது. அவை விரைவில் அதே இடத்தில் வைக்கப்படும். இந்த மஹாகல் லோக் வழித்தடம் கோயிலைச் சுற்றி ஒரு கிமீ தூரத்திற்கு அமைந்துள்ளது. சிலைகள் கீழே விழுந்த போது பார்வையாளர்கள் குவிந்தே இருந்தனர்.
நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. பலத்த காற்றே இந்த விபத்திற்குக் காரணம். நகரில் பல பகுதிகளில் இந்த பலத்த காற்றால் சேதம் ஏற்பட்டுள்ளது” என்றார். குஜராத்தைச் சேர்ந்த நிறுவனங்களே சிலைகளை அமைக்கும் பணியிலும், நடைபாதை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். மகாகல் லோக் திட்டம் மொத்தம் ரூ.856 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.351 கோடி மதிப்பிலான பணிகள் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் விமர்சனம்:
இப்போது ரிஷிகளின் சிலை காற்றுக்கு விழுந்த நிலையில், இதைக் காங்கிரஸ் கடுமையாகச் சாடுகிறது. மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், “உடனடியாக சிலைகளைச் சீரமைக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். தரமற்ற கட்டுமானம் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
நாட்டில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றான மஹாகாலேஷ்வர் கோவிலைச் சுற்றி மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அங்குள்ள ருத்ரசாகர் ஏரியைக் கடந்து செல்லும் இந்த பாதை அமைக்கப்பட்டது. 900 மீட்டர் நீளமான இந்த பாதையில் ஆனந்த தாண்டவமாடும் சிவனின் சிலை, சிவன்- சக்தி தேவி இணைந்து இருக்கும் சிலை என 200க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.