ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஓர் அணியில் இணைந்து நின்று அழுத்தம் கொடுத்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் நீண்ட நாள்களாக கூறிவரும் நிலையில் ஜூன் 7ஆம் தேதி அதற்கு நாள் குறித்துள்ளதாக சொல்கிறார்கள்.
வைத்திலிங்கம் எனும் தளபதி!ஓர் ஆண்டு காலம் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவருக்கு உறுதுணையாக, அணியின் தூணாக இருப்பவர் வைத்திலிங்கம். ஒருவேளை ஓபிஎஸ் உடன் வைத்திலிங்கம் வராமல் இருந்திருந்தால் ஓபிஎஸ்ஸால் இவ்வளவு தூரம் எதிர்ப்பு காட்டியிருப்பாரா என்பது சந்தேகமே என்ற பேச்சு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டத்திலேயே எழுகிறது.
சசிகலா- ஓபிஎஸ்-டிடிவி தினகரன் சந்திப்பு!திருச்சியில் மாநாடு ஓபிஎஸ்ஸின் செல்வாக்கை நிலைநிறுத்தியதில் வைத்தியலிங்கத்தின் பங்கு பெரியது. தற்போது தஞ்சாவூரில் தனது மகனின் திருமணத்தை நடத்த உள்ள வைத்திலிங்கம், மூவர் அணியை இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ஜூன் 7ஆம் தேதி தஞ்சையில் வைத்திலிங்கத்தின் மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஓபிஎஸ் தலைமை தாங்க, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் வைத்திலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
வைத்திலிங்கம் மகன் திருமணம்இந்த திருமண நிகழ்வு மேடையில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒரே சமயத்தில் ஏற்றி எடப்பாடி பழனிசாமி அணியை கிலி அடையச் செய்ய திட்டமிட்டுள்ளார். டிடிவி தினகரனை சந்தித்துள்ள ஓபிஎஸ், சசிகலாவை சந்திப்பதை தள்ளிப் போட்டபடியே உள்ளார். இதனால் அன்றைய தினம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் சந்திக்க உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுப்பார்களா?சசிகலா – டிடிவி தினகரனுமே நீண்ட நாள்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும் நிலையில் வைத்திலிங்கம் வீட்டு விசேஷத்தில் அதிருப்திகள் எல்லாம் மறைந்து மூவரும் கைகுலுக்கி எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.