சென்னை: 80களில் சினிமாவில் அறிமுகமாகி 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் அர்ஜுன்.
1990களில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.
ஹீரோவாக மாஸ் காட்டி வந்த அர்ஜுன், மங்காத்தா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டியிருந்தார்.
இப்போது விஜய்யின் லியோவில் வில்லனாக நடித்து வரும் அர்ஜுனுக்கு தொடர்ந்து அதேமாதிரியான கேரக்டரில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.
விரக்தியில் ஆக்ஷன் கிங்
90ஸ் கிட்ஸ் ரசிகர்களிடம் ஆக்ஷன் கிங் என சொன்னாலே அது அர்ஜுன் தான் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். 1980களிலேயே சினிமாவில் அறிமுகமான அர்ஜுனுக்கு, 1990ம் ஆண்டுக்குப் பின்னர் தான் உக்கிரத் திசையே ஆரம்பமானது. ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, ஆயுத பூஜை, முதல்வன் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
முக்கியமாக விஜயகாந்துக்குப் பின்னர் போலீஸ் கேரக்டரில் அதிகம் நடித்தது அர்ஜுனாக தான் இருக்க முடியும். நேர்மையான போலீஸ் ஆபிஸர், மிலிட்டரி மேன் என நாட்டுப்பற்று மிக்க ஹீரோவாகவே நடித்து வந்த அர்ஜுனை, அப்படியே வில்லனாக மாற்றியது வெங்கட் பிரபு தான். அஜித்தின் மங்காத்தா படத்தில் செம்ம ஸ்மார்ட்டான வில்லன் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார்.
மங்காத்தா படத்திற்குப் பின்னர் மீண்டும் ரவுண்டு வரத் தொடங்கிய அர்ஜுன், இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதிலும் விஜய்க்கு வில்லனாக தான் நடித்து வருகிறாராம் அர்ஜுன். இதனால் தற்போது ‘வில்லன் நடிகர் அர்ஜுன்’ என்ற இமேஜ் விழுந்துவிட்டதாக அவர் ஃபீல் செய்துவருகிறாராம். இது போதாது என அடுத்து தலைவர் 170 படத்திலும் வில்லனாக நடிக்க அர்ஜுனுக்கு ஆஃபர் சென்றுள்ளது.
அதாவது லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரமுக்கு சான்ஸ் சென்றுள்ளது. ஆனால், அவர் நோ சொல்லிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தற்போது தலைவர் 170 படத்தின் வில்லன் சான்ஸ் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு சென்றுள்ளது. ஆனால், அவரோ தொடர்ந்து வில்லனாக நடிக்க ரொம்பவே யோசித்து வருகிறாராம். அதேநேரம் இந்தப் படத்தில் நடிக்க அர்ஜுனுக்கு மெகா ஆஃபர் கொடுத்து ஆசை காட்டி வருகிறதாம் படக்குழு. அதனால் தலைவர் 170 வாய்ப்பை விடவும் முடியாமல் ரொம்பவே விரக்தியில் இருக்கிறாராம் அர்ஜுன். இதற்கு மேல் ஹீரோவாக நடிக்கவும் சான்ஸ் கிடைக்காது என்பதால், அர்ஜுன் கண்டிப்பாக ஓக்கே சொல்வார் என்றே தெரிகிறது.