ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘இன்று நேற்று நாளை’ ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘அயலான்’. தமிழில் தயாராகும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஏலியன் படமிது. சிவாவின் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். தவிர பானுப்பிரியா, இஷா கோபிகர், யோகிபாபு உட்படப் பலரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளி அன்று திரைக்கும் வரும் இப்படத்துக்கு ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்போது இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவிருக்கிறது என்கிற தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து படத்தின் இயக்குநரான ஆர்.ரவிக்குமாரிடம் விசாரித்தேன்.
“‘அயலான்’ சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் உள்ளன. மோஷன் கேப்ச்சர் டெக்ஷானலஜியில் தனி சூட் ஒன்றை வாங்கி காட்சிகளை நவீனத் தொழில்நுட்பத்தில் படமாக்கினோம். அந்த சூட் ஒன்றின் விலையே நாற்பது லட்சம். லாக்டௌனுக்கு முன்னர் இந்த சூட்டை வாங்கினோம். ஆனால், அதன் பிறகு, இப்போது அந்தத் தொழில்நுட்பம் மூன்று முறை அப்டேட் ஆகிவிட்டது. நாங்கள் அதை வாங்கியதிலிருந்து ஒவ்வொரு முறையும் அப்டேட் செய்திருக்கிறோம்.
சென்னையில் உள்ள கிராபிக்ஸ் நிறுவனம்தான் படத்தின் VFX வேலைகளைக் கவனித்து வருகிறது. கிட்டத்தட்ட 400 பேர் ‘அயலானு’க்காக உழைத்து வருகிறார்கள். சென்னை, மும்பை எனப் பல இடங்களிலும் படத்தின் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்தத் தீபாவளிக்குப் படம் வெளியாகிறது என்பதால் வரும் அக்டோபருக்குள் கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிடும். இன்னொரு விஷயம், படத்தின் டீசர் இப்போது வருவதாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை. சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகே, ‘அயலான்’ படத்தின் டீசர் வெளிவரும்” என்கிறார் ரவிக்குமார்.