புதுடில்லி, இந்திய விமானப்படைக்கு விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக, பிரிட்டனைச் சேர்ந்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனம் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ‘ஹாக்’ ரக விமானங்கள் வாங்குவது தொடர்பாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்க்கும், பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்சுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 7,400 கோடி ரூபாய். இது தவிர, கூடுதலாக, 42 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, 2,545 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய கிளை சார்பில், இடைத்தரகர்கள் வாயிலாக இந்தியாவில் உள்ள பெயர் தெரியாத அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக மத்திய அரசை ஏமாற்றியதாக தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், அதன் இந்திய கிளையின் இயக்குனர் டிம் ஜோன்ஸ், ஆயுத வியாபாரி சுதிர் சவுத்ரி, அவரது மகன் பானு சவுத்ரி, பெயர் தெரியாத அரசு அதிகாரிகள், அரசு பதவிகளில் இருந்தவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement