சென்னை : நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை துவங்கவுள்ளார். இந்தப் படம் ப பாண்டி படத்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் லைன் அப்பில் அதிகமான படங்கள் காணப்படுகின்றன. அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் அவர் கைகோர்க்கவுள்ளார்.
வீரன் இயக்குநருடன் இணையும் தனுஷ் :
நடிகர் தனுஷ் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படம் இரண்டு மொழி ரசிகர்களையும் கவர்ந்து ஹிட்டாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து உருவாகி வரும் நிலையில், அதற்கான கெட்டப்பில் தற்போது தனுஷ் காணப்படுகிறார். படத்தில் பிரியங்கா மோகன் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தை துவக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம் அவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம். முதல் படம் ப பாண்டி, ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்தப் படத்தில் ராஜ்கிரணின் சிறுவயது கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படம் வயதானவரின் காதல் மற்றும் உணர்வுகளை மையமாக கொண்டு உருவாகியிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை அவர் இயக்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்தப் படம் கைவிடப்பட்டது. இதையடுத்து தற்போது தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை உருவாக்கவுள்ளார் தனுஷ். பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையை அவர் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மரகத நாணயம் படத்தை இயக்கியுள்ள ஏஆர்கே சரவண் அடுத்ததாக தனுஷுடன் இணைந்து படம் இயக்கவுள்ளதாக தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்தப் படத்திற்காக தான் 3 ஸ்டோரி லைன்களை தனுஷை பார்த்து விளக்கியுள்ளதாகவும் வீரன் படத்தின் ரிலீசை தொடர்ந்து, இதில் ஒரு கதையை தான் தனுஷிற்காக ஸ்கிரிப்ட் வேலையை செய்யவுள்ளதாகவும் சரவண் தெரிவித்துள்ளார்.
தான் இயக்கிய மரகத நாணயம் படம் தனுஷிற்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள வீரன் படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய அவர், இந்தத் தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். வீரன் படத்திற்காக தான் 4 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளதாகவும் இந்தப் படம் சுரங்கத் தொழிலை மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.