ஐபிஎல் 2023 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. ஞாயிறன்று நடந்திருக்க வேண்டிய இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட, `ரிசர்வ் டே’வான நேற்று (திங்கள்) போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற தோனி சேஸிங் எனச் சொல்ல, குஜராத் பேட்டர்கள் அதிரடியால் வெற்றி இலக்கு 215-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியபோதே மழை குறுக்கிட, DLS முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இமாலய இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கான்வே, ரஹானே, ராயுடு, துபே என அனைவரும் முக்கியப் பங்காற்ற கடைசி ஓவரில் ஜடேஜாவின் அதிரடியால் வெற்றி பெற்றது மஞ்சள் படை! இதனைத் தொடர்ந்து வெற்றிக் கோப்பையை ஏந்திய தோனி, தன் ஓய்வு முடிவு குறித்தும், இந்த வெற்றி குறித்தும், கடைசி போட்டியில் விளையாடியிருக்கும் அம்பத்தி ராயுடு குறித்தும் பேசினார். அந்த நெகிழ்ச்சியான உரை அப்படியே இங்கே…
“இதுதான் என் ஓய்வை அறிவிக்கச் சரியான நேரமாக இருந்திருக்கும். இப்படியே விடைபெறுவது எளிதான விஷயமாக இருக்கும். அடுத்த 9 மாதங்கள் கடுமையாக உழைத்து இன்னொரு சீசன் ஆட முயற்சி செய்வது பெரிய சவாலாக இருக்கும். என் உடல் அதற்கு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் என் மீது காண்பித்த அன்பிற்கு என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்.
சில நேரங்களில் நானும் எமோஷனல் ஆவது உண்டு. முதல் சிஎஸ்கே போட்டியின் போது அனைவரும் என் பெயரைக் கோஷமிடும்போது என் கண்கள் கலங்கின. சில நேரம் என்னை அமைதிப்படுத்திக்கொள்ள டக்-அவுட்டிற்கு (Dug Out) சென்றேன். இதை நான் அனுபவிக்க வேண்டும் என்பது புரிந்தது. இல்லாத ஒன்றை நான் காட்ட முற்படுவதில்லை. நான் நானாக இருப்பதையே அவர்கள் இந்த அளவு விரும்புகின்றனர். ஒவ்வொரு கோப்பையும் ஸ்பெஷல்தான். ஆனால், ஐபிஎல்லை பொறுத்தவரை மிகவும் இக்கட்டான சூழல்களுக்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். இன்று சில தவறுகள் செய்தோம். பௌலிங் சிறப்பாக இல்லை. ஆனால், பேட்டர்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு போட்டியை வென்று கொடுத்தனர். சில நேரங்களில் நானும் எரிச்சல் அடைவது உண்டு. ஆனால், அவர்கள் நிலையிலிருந்து என்ன மாதிரியான அழுத்தங்கள் இருந்தது என யோசிப்பேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். ரஹானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் பலரும் அணியில் இருப்பதால் இளம் வீரர்கள் அவர்களிடம் எப்போதும் மனம் விட்டுப் பேச முடியும்.
ராயுடுவின் சிறப்பு என்னவென்றால் எப்போது களத்திற்கு வந்தாலும் அவரது 100 சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும் என நினைப்பவர் அவர். அதே சமயம் அவர் இருக்கும் வரை எங்களால் ஃபேர் பிளே விருதை வெல்லவே முடியாது. இந்தியா ஏ அணிக்காக ஆடும் போதிலிருந்து அவரை எனக்குத் தெரியும். ஸ்பின், பேஸ் என இரண்டையும் நன்றாக ஆடக்கூடியவர். இன்று ஸ்பெஷலாக எதாவது செய்வார் என எதிர்பார்த்தேன். என்னைப் போலவே மொபைலைப் பெரிதாகப் பயன்படுத்தாதவர் அவர். அவர் வாழ்வின் அடுத்த கட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார் என நம்புகிறேன்!”