தமிழ், தெலுங்கு என கிட்டதட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
தற்போது தெலுங்கில் ‘Bhola Shankar‘, தமிழில் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைக் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் என் அன்பான நண்பரை வதந்திகளில் இழுக்க வேண்டியதில்லை. நான் திருமணம் செய்யப்போகும் அந்த மர்ம மனிதரை நானே வெளிப்படுத்துவேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஆனால், யாரையும் இதுவரை தேர்வு செய்யவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் குறித்து அவரது தந்தை சுரேஷ் குமார் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “கீர்த்தியும், ஃபர்ஹானும் நல்ல நண்பர்கள். ஃபர்ஹானின் பிறந்தநாளில் அவருடன் எடுத்த புகைப்படத்தை கீர்த்தி பகிர்ந்ததை ஒரு தமிழ் இணையதளப் பத்திரிக்கை எடுத்து வெளியிட்டு தவறானத் தகவல்களைப் பரப்பி விட்டது.
கீர்த்தியின் திருமணங்கள் குறித்து பரவிய தகவல்கள் அனைத்தும் தவறானவை. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். கீர்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால் கண்டிப்பாக முதலில் அறிவிப்பை வெளியிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.