போபால்: கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில், கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ், கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்ற போது தனது விலை உயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவறவிட்டுள்ளார். தொடர்ந்து தனது போனை மீட்க அணையில் இருந்து சுமார் 10 அடி ஆழத்திற்கு நீரை அவர் வெளியேற்றி இருந்தார்.
இந்த செய்தி தேசிய அளவில் கவனம் பெற்றது. அப்போது வெளியேற்றப்பட்ட தண்ணீரால் எந்தப் பயனும் இல்லை என தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ராஜேஷ் விஸ்வாஸ் சொல்லி இருந்தார். தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கான்கெர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
செல்போனை மீட்கும் முயற்சியில் சுமார் 21 லட்சம் லிட்டர் நீரை அவர் வெளியேற்றியதாக ஆய்வில் தெரியவந்தது. இந்த சூழலில் அதற்கான பணத்தை செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. வீணடித்த நீருக்கு நிகரான தொகையை ராஜேஷ் விஸ்வாஸின் சம்பளப் பணத்தில் இருந்து பிடித்தம் செய்யலாம் என அதிகாரிகள் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளனர். கோடை கால தேவை மற்றும் பாசனத்திற்காக அணையில் இருந்த நீர் அவசியம் தேவை என திட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது? சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்தில் தேக்கும் நீரில் இருந்து பாசனம் பெறப்படுகிறது. இந்த சூழலில் தனது போனை மீட்க 30 ஹார்ஸ்பவர் கொண்ட இரண்டு என்ஜின் பம்ப் மூலம் தண்ணீரை வெளியேற்றியுள்ளார் ராஜேஷ் விஸ்வாஸ். அதனால் 15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 5 அடியாக குறைந்தது. சுமார் 3 நாட்கள் தொடர்ச்சியாக நீரை வெளியேற்றும் பணி நடந்துள்ளது.
அதன் பின்னர் அந்த போனை அவர் மீட்டுள்ளார். இருந்தும் நீரில் நீண்ட நேரம் இருந்த காரணத்தால் அந்த போன் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது. ராஜேஷ் விஸ்வாஸ், அணையில் இருந்த நீரை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வாய்மொழி உத்தரவு பெற்றுள்ளார். மேலும், அந்த செல்போனில் முக்கிய அரசு தரவுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.