சென்னை: கடந்த 9 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 3.50 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையில் ‘சேவை, நல்லாட்சி, ஏழைகளுக்கான அரசு’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர் சிங் தலைமை வகித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, முன்னாள் எம்.பி.க்கள் கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.
இதில், பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்த காணொலி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவருக்கு வீடு திட்டத்தின் கீழ் 3.50 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 கோடி பேர் வசிக்கின்றனர்.
கடந்த 9 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் பணி 2026 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு முன்னேற்றம்தரும் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்வோம். இது தொடர்பாக தமிழகத்தில் ஒரு மாதம் பிரச்சாரம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
2014-க்கு முன் உலக நாடுகள் வளர்ச்சிப் பாதையில் இருந்தபோது, மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அதிக ஊழல்கள் நிலவின. ஆனால், 2014-க்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.