பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இதனால் நகர நக்சலைட்டுகள் வெளியே வரத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் சாசனம் மீது நம்பிக்கை இல்லை. துப்பாக்கி குண்டுகளை தான் அவர்கள் நம்புகிறார்கள். பள்ளி பாடத்திட்டத்தை மாற்ற இந்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நிறுவனரின் பாடத்தை எப்படி நீக்குகிறார்கள் என்று நாங்கள் பார்க்கிறோம்.
நகர நக்சலைட்டுகளின் பேச்சை கேட்டு நடந்தால் அதற்கான பாடத்தை இந்த அரசு கற்கும். நாங்கள் குறைந்த இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் 36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். புதிய தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு தாய்மொழி கல்வி, நவீன கல்வி தேவை இல்லை.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
நேற்று முன்தினம் முதல்-மந்திரி சித்தராமையா கன்னட எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் நேரில் சந்தித்து பா.ஜனதா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மதம் சார்ந்த முடிவுகளை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.