புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கம்போடிய மன்னர் நரோடம் சிகாமணியை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
70 வயதாகும் கம்போடிய மன்னர் நரோடம் சிகாமணி, முதன்முறையாக இந்தியா வந்துள்ளார். நேற்று மாலை இந்தியா வந்த அவர், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். இதையடுத்து, அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதையடுத்து, கம்போனிய மன்னரை, ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கம்போடிய மன்னரை சந்தித்தது கவுரவம். நமது இரு நாடுகளும் நமது இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அவரது வருகை, நமக்கிடையேயான வலுவான நாகரீகப் பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பாரம்பரிய பாதுகாப்பு, கண்ணிவெடி அகற்றல், நீர் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார திட்டங்கள் ஆகியவற்றில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளின் நட்புறவு வெளிப்படுத்தப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வழங்கப்படும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் கம்போடியாவைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. கம்போடியாவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி உதவியை இந்தியா அளித்து வருகிறது. கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில், தா புரோம், பிரீச் கோயில் ஆகியவை இந்திய நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளன.
2022-23 நிதி ஆண்டில் இரு தரப்பு வர்த்தகம் 366 மில்லியன் டாலராக உள்ளது. கம்போடியாவில் இந்தியா 115 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக மருந்து உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ் துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள கண்ணிவெடி அகற்றும் கருவிகளை இந்தியா கம்போடியாவுக்கு அன்பளிப்பாக அளித்துள்ளது. அதோடு, 50 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கும் கடனுதவி அளித்துள்ளது. கம்போடிய ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கிறது. கம்போடியாவுக்குச் சென்றும் நமது ராணுவ வீரர்கள், கம்போடிய ராணுவத்தினருக்கு பயற்சி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.