ஹரியானவைச் சேர்ந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி ரூ.1.8 கோடி ஏமாற்றிய நைஜீரிய நபர் இருவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஏப்ரல் 10-ம் தேதியன்று மனேசர் காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகாரளித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் தன்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி என அறிமுகப்படுத்திக்கொண்டு பழக ஆரம்பித்தார். அதன் பின்னர் தொடர்ந்து பேசிவந்த அந்த நபர் கடந்த ஆண்டில் ஒருநாள், ஐபோன், நகைகள் மற்றும் பிற பொருள்கள் அடங்கிய பார்சலை அனுப்புவதாக அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு டிசம்பர் 6-ம் தேதியன்று ஒருவர், அந்தப் பெண்ணுடைய பெயரில் பார்சல் வந்திருப்பதாகவும், அதைப் பெற்றுக்கொள்ள ரூ.35,000 வரி செலுத்த வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணும் வரி செலுத்தவேண்டும் என்று கோரிய நபரால் பகிரப்பட்ட வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறார். அதன் பின்னரும் அந்த நபர், United national anti terrorist clearance மற்றும் பிற கட்டணங்கள் என்ற பெயரில் பெண்ணிடம் தொடர்ந்து பணம் கேட்டிருக்கிறார்.
இப்படியே போக இதுவொரு மோசடி என்று அந்தப் பெண் உணர்ந்த தருணத்தில் மொத்தமாக 1.8 கோடி ரூபாயை அந்த நபருக்கு அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீஸார், டெல்லியின் நிஹால் விஹார் பேஸ்-2 பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று கைதுசெய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் நைஜீரியாவைச் சேர்ந்த எபுகா பெலிக்ஸி (Ebuka Felixi), சுக்வாகா எவெரே (Chukwaka Ewere) எனத் தெரியவந்தது.
மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் டெல்லியின் வெளிப்புற பகுதியில் வசித்துவந்திருக்கின்றனர். அதோடு, அவர்களிடமிருந்து காசோலை புத்தகம் (Cheque book), 16 வங்கி பாஸ்புக்குகள், 25 ஏ.டி.எம் கார்டுகள், ஏழு செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு ஸ்கூட்டர், 10,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட பின்னர் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். இது குறித்துப் பேசிய குற்றப்பிரிவு ஏ.சி.பி வருண் தஹியா, “இருவரும் மே 11-ம் தேதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.