எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலகில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருந்தாலும், மக்கள் சில்லறை காசுகளை மாற்றிக் கொண்டு பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை இன்னும் உள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய விடயம். அதன்படி, எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் கீழ் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் பஸ்களில் நடத்துனர்கள் இல்லை. பணப் பயன்பாடு இல்லை. இலத்திரணியல் அட்டை முறையின் ஊடாக பஸ்கள் பயணிக்கின்றன.
இலங்கையில் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். அதன்படி, இதுவரை 12 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஆனால் சில தரப்பினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எமக்கு இடமளிக்காவிட்டால், அவர்களின் விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றியடையும். அதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
ஹங்கேரிய கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கண்டி, கெட்டம்பே, கொ{ஹவல ஆகிய பகுதிகளில் தற்போது நிர்மாணிக்கப்படும் மேம்பாலங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை வெளிநாட்டு உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திட்டங்களும் தடைப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளை அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளோம்.
கடனை மறுசீரமைக்கும் வரை, இந்த வீதிகளில் பயணிக்கக் கூடியதாக மாற்ற 53 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அவர்கள் சம்மதித்துள்ளனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்புத் திட்டம் வெற்றியடையும் என்று நாம் நம்புகின்றோம்.
கடன் மறுசீரமைப்பு வெற்றியடைந்தவுடன், இடைநிறுத்தப்பட்டுள்ள வீதித்; திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.