சென்னை : கங்குவா படத்திற்காக நடிகர் சூர்யா புது அவதாரத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்பீம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த ஹைப்பை இருமடங்காக்கியது.
கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரோலக்ஸ் என்ற ஒரு புது அவதாரத்தையே சூர்யா எடுத்தார்.
இயக்குநர் சிறுத்தை சிவா : நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கங்குவா : சூர்யா 42 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கங்குவாவிற்கு அர்த்தம் தெரிந்து கொள்ள கூசூளில் வலைவீசி தேடினார்கள். கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்றால் பவர் ஆப் ஃபயர் என்று அர்த்தம் என்றும், தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்ந்து எடுத்து வைத்துள்ளதாக இயக்குநர் தலைப்புக்கு விளக்கம் கொடுத்தார்.
சென்னையில் செட் : 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களம் கொண்ட இப்படத்திற்காக சூர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து புது கெட்டப்பிற்கு மாறிவருவதாக வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், கங்குவா படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலை அடிவாரத்தில் நடைபெற்றது. தற்போது சென்னையில் செட் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் ஹிஸ்டாரிக்கல் கதையாக இருப்பதால், படக்குழு அதற்காக தயாராகி வருகிறது.
புது அவதாரம் : இதற்காக சூர்யா புதுவிதமான கெட்டப்புடன் தயாராகி வருகிறார். இப்படி கங்குவா படத்தின் முன் தயாரிப்பு வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக கங்குவா படத்தில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் படங்களிலேயே கங்குவா ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படமாக தயாராகி வருகிறது. ஞானவேல் ராஜா சூர்யாவுடன் மீண்டும் இணைந்ததற்கு இப்படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய காரணம்.
பெரிய பட்ஜெட் படம் : இதுவரைக்கும் பண்ணாத பெரிய பட்ஜெட் படம் எடுக்கிறேன் என்று ஞானவேல் ராஜா சொன்ன பிறகுதான், இருவருக்கும் இருந்த மனக்கசப்பை மறந்து சூர்யா இறங்கி வந்தார். மேலும் கங்குவா படத்தை 30 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால், படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி என்பது இதுவரை தெரியவில்லை என் வலைப்பேச்சு அந்தணன் பேட்டியில் கூறியுள்ளார்.