சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது தமிழக பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுடன் பல்வேறு கருத்துகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறது. தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டில் கருத்தியல் ரீதியிலும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.
மத்திய அரசு: குறிப்பாக, மத்திய அரசை “ஒன்றிய அரசு” என்று அழைத்து, பாஜகவுக்கு அன்று ஷாக் தந்ததை மறுக்க முடியாது.. இந்த ஒன்றிய அரசு என்ற வார்த்தையானது, சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி வந்ததையும் மறக்க முடியாது.
அதாவது, முதல்வராக பொறுப்பேற்றதுமே, முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் “ஒன்றிய அரசு” என்று குறிப்பிட்டு எழுதி, டெல்லியை கடுப்பாக்கியிருந்தார்.. இதற்கு முன்புகூட, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சீமான் சொல்லி வந்தாலும், ஸ்டாலின் சொன்னதுமே, அந்த வார்த்தை தேசிய அளவில் கவனம் பெற்றது.. அதனால், திமுக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரை, மத்திய அரசு என்பதா? அல்லது ஒன்றிய என்பதா? என்ற குழப்பமும் நீடித்தது.
அறிவிப்புகள்: இதற்கு பிறகுதான், திமுக தன்னுடைய வீர்யத்தை சற்று குறைத்தது.. ஆளுநர் உரையில், மத்திய அரசு என்றே பலமுறை குறிப்பிட்டு பேசியதே தவிர, ஒன்றிய அரசு என்று ஓரிரு முறைதான் உச்சரிக்கப்பட்டது.. இந்த சூழலில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.. அந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தவர் அதன் தலைவர் ஐ லியோனி ஆவார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பொறுப்பை ஏற்றதுமே லியோனி ஒருபேட்டி தந்திருந்தார்.. அதில், “ஒன்றிய அரசு எனும் வார்த்தையை மக்கள் சிறப்பாக பயன்படுத்த துவங்கி விட்டனர். அடுத்து பருவ புத்தகங்கள் அச்சிடும் போதும் மத்திய அரசு என்ற சொல் நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என்று புத்தகங்களில் அச்சிடப்படும்” என்று உறுதி கூறியிருந்தார்..
பாடத்திட்டம்: அந்தவகையில், மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக “ஒன்றிய அரசு” என்று மாற்றுதல், கருணாநிதியின் செம்மொழி பாடலை புகுத்துதல், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தல் செய்தல் போன்ற மாற்றங்கள் செய்யப்படலாம் என்றெல்லாம் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அப்படி எதுவும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அடுத்த சில தினங்களிலேயே, லியோனி இன்னொரு பேட்டி தந்திருந்தார்.
அதில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் “ஒன்றிய அரசு” என இந்த கல்வியாண்டில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று லியோனி தெரிவித்திருந்தார்..
2022-2023ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும், 2023-2024ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும், திருத்தம் இருப்பின் அது, 2023-2024ஆம் கல்வியாண்டில் அமலாக வாய்ப்பு உள்ளதாகவும் லியோனி அப்போது செய்தியாளர்களிடம் விளக்கியிருந்தார்.
பாஜக: லியோனி இப்படி சொன்னதுமே, அது அந்த சமயத்தில் பேசுபொருளானது… திமுகவின் பின்வாங்கலாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்பட்டது.. “பாஜகவை அளவுக்கு அதிகமாக பகைத்து கொள்ள முடியாது, ஓரளவு இணக்கமாக போக வேண்டிய சூழல் உள்ளது.. தேவையில்லாமல் மத்திய அரசை சீண்டுவதால், பொதுமக்களுக்குதான் பாதிப்பு ஏற்படும்.. அதனால், இந்த விஷயத்தில் நாசூக்காகவே கையாள வேண்டியிருக்கும். அதனால்தான் திமுக பின்வாங்குகிறது என்றார்கள்.. மேலும் சிலரோ, “பாஜக மீது பயமா? அந்த பயம் இருக்கட்டும்” என்றும் விமர்சித்தனர்.
பாடத்திட்டம்: இந்நிலையில், ஜுன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில் கோடை வெயில் காரணமாக ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது… அதன்படி, ஜூன் 7ம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.. எனவே, பள்ளிகள் திறப்பிற்கான தயாரிப்பு பணிகளும் நடந்து வருவதுடன், பாடப்புத்தங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல்லில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் பாடநூல் புத்தகங்கள் பள்ளிக்கு அனுப்பும் பணியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி இருவரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய லியோனி, “நடப்பு கல்வி ஆண்டிலிருந்து 9ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திராவிட மொழிக் குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாறு பாடத்தைச் சேர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்று அதற்கான உத்தரவை வழங்குவார்.
அறிவிப்பு இல்லை : தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. இலவச பாட புத்தகங்கள் மட்டுமின்றி 11 கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழக அரசு வழங்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்” என்றார்.
அடுத்த கல்வியாண்டு பாடத் திட்டத்தில் (2024-25) முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வரலாறு சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, “ஒன்றிய அரசு” திருத்தம் உள்ளிட்டவை குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.