பெங்களூர்: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு இலவச அரசு பேருந்து திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அம்மாநில போக்குவரத்துத் துறை ராமலிங்க ரெட்டி தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த மே 20 ஆம் தேதி பதவியேற்று உள்ளார்கள்.
அவர்களுடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். யுடி காதர் கர்நாடகா சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 27 ஆம் தேதி மேலும் 24 பேர் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் கர்நாடக அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கான இலாக்காக்கள் கடந்த 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
இதில் போக்குவரத்துத் துறை இலாக்கா அமைச்சர் ராமலிங்க ரெட்டி வசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பெங்களூரில் 4 மண்டல அரசு போக்குவரத்துக் கழக தலைவர்களுடன் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார். இதில் தமிழ்நாட்டை போன்றே கர்நாடகாவிலும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட் வழங்குவது குறித்தும் ஆலோசித்து உள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கும் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதன் கிழமை அரசிடம் முடிவை சமர்பிக்க உள்ளோம். அதன் பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.
நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயண சீட்டு வழங்கப்படும். முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில், இந்த திட்டத்திற்கான செலவுகள் குறித்து அறிக்கை சமர்பிப்போம். அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், வறுமை கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் என்ற எந்த நிபந்தனையையும் நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. எனவே அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.” என்று தெரிவித்தார்.
வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே இலவச பயணச்சீட்டு என்று வெளியான தகவலுக்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநில தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச டிக்கெட் என்பதுதான்.
பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஆதரவையும், வரவேற்பையும் இந்த திட்டம் பெற்றுத் தந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதனை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொண்டு வரப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது மகளிருக்கு கட்டணமில்லா அரசு பேருந்து பயண திட்டம். இதனை தற்போது செயல்படுத்தி தமிழ்நாட்டின் வழியை கர்நாடகம் பின்பற்றுகிறது.