கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தன் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பது பல ஆண்டு காலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. கர்ப்பகாலம் என்பது தாய்க்கு மட்டுமன்றி சேய்க்கும் முக்கியமான காலம். எனவே, கர்ப்ப நாள்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். சளி, இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் உடலைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் தங்கள் உடம்பில் எந்தவொரு கோளாறும் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. பித்தம், சூடு போன்றவை அதிகம் இல்லாமல் சீராக வைத்திருப்பது, குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
புரதச்சத்து, மாவுச்சத்து, தேவையான அளவு கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் என சமச்சீரான உணவியல் முறையினைப் பின்பற்ற வேண்டும். இது, உடலில் உள்ள உபாதைகளைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றில் உள்ள சிசுவிற்கு ஊட்டத்தையும் அளிக்கும்.
ஆனால் உடல் சூட்டினை சீராக வைத்துக் கொள்ள, மிளகு -மஞ்சள் பாலினை தினமும் கர்ப்பிணிகள் பருகுவது கட்டாயம் என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாகவே மஞ்சளினால் கிடைக்கும் நன்மைகளை நாம் அறிந்திருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் மனிதர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பொருள் மஞ்சள்தூள். மஞ்சள்தூள் இல்லாமல் உணவு சமைக்க முடியாது. குறிப்பாக குழம்பு, கிரேவிகளில் சுவைக்கும் நிறத்துக்கும் காரணம் மஞ்சள்தூள் தான்.
கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் தூள், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. மஞ்சளில் உள்ள Curcumin என்னும் பொருள்,வீக்கம் தடுக்கவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் இருக்கிறது. அதேபோல் மிளகிலும் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளன. உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ள மஞ்சளையும், மிளகையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் மிளகு- மஞ்சள் பால் செய்யும் பக்குவம் பற்றியும், அதனை பருகுவதன் விதிமுறை பற்றியும் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் கூறியதாவது…
“ஷீர கஷாயம் என்று சொல்லப்படும் இந்த மிளகு -மஞ்சள் பாலினை தயாரிப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அதாவது 1:8:32 என்ற அளவு கணக்கில் செய்ய வேண்டும். அதாவது, ஒருமடங்கு மிளகு மற்றும் மஞ்சள் தூள் எடுத்துக் கொண்டால் 8 மடங்கு பால் 12 மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இந்தக் கலவையினை கொதிக்க வைத்து, பாலின் அளவுக்கு சுண்டக் காய வைக்க வேண்டும். இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே சமயம், இதனை அனைத்து கர்ப்பிணிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூற இயலாது. சிலருடைய உடலின் தன்மைக்கேற்ப இது மாறுபடும். எனவே மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப இதனைப் பருகுதவதே நன்மை தரும்” என்றார்.
இந்த மிளகு- மஞ்சள் பாலினை தினமும் கர்ப்பிணிகள் பருகுவது அவசியமா என்பது பற்றி, சித்த மருத்துவர் மல்லிகாவிடம் கேட்டோம்… அவர் “மிளகு- மஞ்சள் பாலினை கர்ப்பிணிகள் தினமும் பருக வேண்டிய தேவை இல்லை. பொதுவாகவே பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகு தூளைச் சிறிதளவு சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதும். ஏனெனில், மஞ்சள் மற்றும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும் சிலருடைய உடலின் வாகிற்கேற்ப மாறுபடும். அதனால், தினமும் பருகக்கூடாது. வாரத்திற்கு இரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளுமபோது சளி, இருமல் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்” என்றார்.
– சொர்ண மீனா ராமநாதன்