மத்தியப்பிரதேச அரசின் `முக்கிய மந்திரி கன்னிய விவாக்’ திட்டத்தின் கீழ் 2006-ம் ஆண்டிலிருந்து ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் கூட்டுத்திருமணத்தை மாநில அரசு நடத்தி வருகிறது.
அந்த வகையில் ஜபுவா மாவட்டத்தில் உள்ள தண்டலா என்ற இடத்தில் 296 ஜோடிகளுக்கு மாநில அரசு சார்பாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு மாநில அரசு சார்பாக பரிசு பார்சல் வழங்கப்பட்டது. அந்த மேக்கப் பாக்ஸை திறந்தபோது, உள்ளே காண்டம், கருத்தடை மாத்திரைகள் இருந்தன.
இது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ’இதில் எங்களுக்குத் தொடர்பு இல்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காண்டம் மற்றும் கருத்தடை மாத்திரைகளை வழங்கி இருக்கலாம். ’முக்கிய மந்திரி கன்னிய விவாக்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் 49 ஆயிரம் செலுத்தப்படுகிறது. இது தவிர தண்ணீர், சாப்பாடு, பந்தல் அமைக்க ஒரு ஜோடிக்கு 6 ஆயிரம் செலவிடப்படுகிறது. ஆனால் திருமண ஜோடிக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டில் என்ன இருந்தது என்று எங்களுக்குத் தெரியாது’ என்று தெரிவித்தார்.
திருமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரைகள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு இதே போன்று நடந்த கூட்டுத்திருமணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து விமர்சனம் எழுந்தபோது பெண்களின் வயது, உடல் தகுதி, ரத்தசோகை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள இந்த சோதனை நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.