அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்களைப் பெறும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் பிள்ளைகள் ‘சிசு செரிய’ பஸ் சேவையில் இலவசமாக பயணிக்கும் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த பிள்ளைகளுக்கு சிசு செரிய பஸ் பஸ் சேவையில் இலவசமாக பயணிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் குறிப்பிட்டார்.
சிசு செரிய பஸ் சேவையை மிகவும் சிரமத்துடன் கொண்டு செல்கின்றோம். அதற்காக கிடைக்கின்ற மானியங்கள் போதுமானதாக இல்லை. எந்தவொரு திருத்தமும் இல்லாமல் அந்த பஸ் சேவையை நிறுத்த முடியும். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவும் முன்னெடுக்கும் இந்த பஸ் சேவையை முற்றாக நிறுத்தும் எண்ணம் எமக்கு இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த பஸ்களில் பயணிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 70 வீதம் மானியத்தை அரசாங்கம் வழங்கும். எஞ்சிய 30 வீதம் பெற்றோர்களிடம் இருந்து அறவிடப்படும். ஆனால் இன்று அந்த 30 வீதத்தைக் கூட பொறுப்பேற்க முடியாத பெற்றோர்கள் பலர் உள்ளனர். அவ்வாறான மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி சிசு செரிய பஸ் சேவையில் இலவசமாக பயணிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.