சென்னை: குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு 10 கி.மீ. தொலைவு பெற்றோர் அழுதபடியே சுமந்து சென்ற சோகம் நம் தமிழகத்தில் நடந்திருப்பது நெஞ்சை பதற செய்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்திற்குள்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி விஜி. இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த போது தனுஷ்காவை நல்ல பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதையடுத்து அலறி அடித்துக் கொண்டு குழந்தையை அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமானது. இதையடுத்து குழந்தைக்கு உடல் முழுவதும் விஷம் பரவி பாதி வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. தகவலறிந்து வந்த போலீஸார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற போது சாலை வசதி இல்லாததால் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டனர். இதையடுத்து சிறிது தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று பின்னர் நடந்து சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு பெற்றோர் குழந்தையின் சடலத்தை தூக்கிச் சென்றனர்.
அந்த குழந்தையை பார்த்து தாய் அழுது கொண்டே சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த மலைகிராமத்திற்கு சாலை போடுவதற்கான ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாம்பு கடித்த குழந்தையை சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாமல் செல்லும் வழியிலேயே குழந்தை உயிர் இழந்தது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்து திரும்பும் வழியில் சாலை வசதி இல்லை என்று கூறி ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி விடப்பட்டு, 10 km தூரம் குழந்தையின் பெற்றோர் அழுதபடி குழந்தையை சுமந்து சென்ற அவலம், நம் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது நெஞ்சை பதறச் செய்கிறது. “திராவிட மாடல் ஆட்சி” என பெருமை பேசும் அரசின் அலட்சியம் கண்டிக்கதக்கது. தமிழக அரசு , இக்குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்குவதோடு கிராமத்திற்கு சாலைவசதி ஏற்படுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.