சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலமாக விரைவில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் டிஆர்பி நடத்தும் தேர்வு மூலமாகவே அரசுக் கல்லூரிகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, நடப்பாண்டு டிஆர்பி தேர்வுக்கான அறிவிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. இதனால் பட்டப்படிப்பை முடித்து ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணிக்காக காத்திருப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நடப்பாண்டில் அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக அளவில் விருப்பம் காட்டி வருகின்றன. மாணவர்களிடம் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததால் கல்லூரிகளில் மகளிர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
உயர்கல்வியை பொறுத்தவரை, அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படிப்பதற்கான வாயப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு கலை கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பேராசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இதுதொடர்பான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு 4 ஆயிரம் பேர் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு பொன்முடி கூறினார்.