சென்னை: “சென்னையில் ட்ரோன் வாயிலாக சொத்து வரி மதிப்பீடு செய்வோர், ஏழை – நடுத்தர வீடுகளில்தான் மேற்கொள்கின்றனர். அடுத்து மக்களவைத் தேர்தல் வருகிறது. ஏற்கெனவே சொத்து வரி உயர்த்தி உள்ளோம்” என்று கவுன்சிலர் ஒருவர் புலம்பல் தொனியில் பேசினார்.
சென்னை மாநகராட்சி மாதந்திர மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில், நேரமில்லா நேரத்தின்போது, 92-வது வார்டு கவுன்சிலர் திலகர் பேசுகையில், “சென்னை மாநகராட்சியில் உள்ள மயான பூமிகளில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெறுகின்றனர். எனவே, குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து மாநகராட்சியே வாங்கி கொள்ளலாம். மேலும், தொகுதி வாரியாக வார்டு பிரிப்பு எப்போது நடைபெறும்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ‘‘சென்னை மாநகராட்சியில் மயான பூமிகளில் அனைத்து சேவைகளும் இலவசமாக தான் வழங்கப்படுகிறது. அது குறித்து அறிவிப்பு பலகை விரைவில் அமைக்கப்படும். தொகுதி வாரியாக வார்டு பிரிப்பு அறிவிப்பை அமைச்சர் விரைவில் வெளியிடுவார். மிக விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்’’ என்றார்.
129-வது வார்டு திமுக, கவுன்சிலர் ரவிசங்கர் பேசுகையில், ‘‘ட்ரோன் வாயிலாக சொத்து வரி மதிப்பீடு செய்வோர், ஏழை – நடுத்தர வீடுகளில்தான் மேற்கொள்கின்றனர். அடுத்து மக்களவைத் தேர்தல் வருகிறது. ஏற்கெனவே சொத்து வரி உயர்த்தி உள்ளோம்” என்றார்.
இதற்கு பதிலளித்த துணை மேயர் மகேஷ்குமார், “சென்னையில் பெறுநிறுவன கட்டடங்களில் முதற்கட்டமாக ஆய்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்” என்றார்.
சென்னை மாநகராட்சியின் தன்னாட்சி அதிகாரம் பறிப்பு கவுன்சிலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் அளித்த பதில், “அனைத்து மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 2023 விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியால், சில அதிகார வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளது. மேயர், நிலைக்குழுக்கள் உள்ளிட்ட அதிகார வரம்புகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பணியாளர்களும் சிலர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஒப்பந்தம், பணிகள், சட்டம் ஆகிய மூன்று குழு பரிந்துரைகளை அரசுக்கு சமர்பித்துள்ளோம். அதில், சில அதிகார வரம்புகள் பாதிக்காமல் இருக்க அனுமதிக்கும்படி கோரியுள்ளோம்” என்று அவர் கூறினார்.
கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசுகையில், ‘‘திரையங்கம், திருமண மண்படங்கள், தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்கள் பல கோடி ரூபாய் சொத்து வரி நிலுவை வைத்துள்ளது. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியா சபை கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்’’ என்றார். இதற்கு, ஆணையர் அளித்த பதிலில், ‘விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.