தருமபுரி நெல் கிடங்கில் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயம்: அதிகாரிகள் விசாரணை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் கிடங்கில் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வாணிபக் கழக கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை பகுதியில், மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு வளாகம் அருகே வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு இருப்பு வைக்கப்படும் நெல் மூட்டைகளை ஒப்பந்த அடிப்படையில் அரவை ஆலைகளுக்கு வழங்கி அரிசியாக்கி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருப்பு வைப்பர். இந்த அரிசி, ரேஷன் கடைகள், அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு விநியோகம் செய்யப்படும். இவ்வாறு கிடங்கில் இருந்து நெல் பெற்று அரிசியாக்கி தரும் பணியில் தருமபுரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்த நெல் கிடங்குக்கு அவ்வப்போது தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நெல் அனுப்பி வைக்கப்படும். அந்த வரிசையில், அண்மையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இந்த கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த நெல் மூட்டைகளில் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பதாக சென்னையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கு புகார் சென்றுள்ளது.

அதைத் தொடர்ந்து கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் கடந்த 2 நாட்களாக தருமபுரியில் திறந்தவெளி நெல் கிடங்கு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல் கிடங்கில் இருந்து அரவைக்காக நெல் மூட்டைகளை பெற்றுச் செல்லும் ஆலைகள் தரப்பையும் தணிக்கை செய்ய கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் தயாராகி வருவதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, நுகர்பொருள் வாணிபக் கழக தருமபுரி மண்டல அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, ‘புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதும், விசாரணை நடத்தி வருவதும் உண்மைதான். ஆனால், கிடங்கில் பெரிய பெரிய படுக்கைகள் அமைத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முழுவதையும் ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி முடிக்கும்போது தான் இருப்பு கணக்கில் இருந்த மூட்டைகளும் வெளியில் ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட மூட்டைகளும் பொருந்திப் போகிறதா? என்பது தெரிய வரும். இதற்கு ஓரிரு வாரங்கள் வரை அவகாசம் தேவை. அதன்பின்னர், நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தால் விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.