அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் எடுப்பதை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரை, ‘நடப்பது ஆட்சி எங்க ஆட்சி, உன்னால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது’ என்று திமுக பிரமுகர் மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த சுப்பையா குளம் தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்த பணியில் ஜேசிபி எந்திரம் மூலம் அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டு வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக, அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஷாஜி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜெகன் என்பவர், ஷாஜியை தொடர்பு கொண்டு, நடப்பது எங்கள் ஆட்சி தான், உன்னால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று மிரட்டி உள்ளார்.
இது குறித்து ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், சமூக ஆர்வலர் ஷாஜி, நான் மாநகராட்சி இடம் தான் கேள்வி கேட்டேன். நீங்கள் ஏன் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்க, அதற்கு திமுக பிரமுகர் ஜெகன், அப்படித்தானே மணல் அள்ளுவோம். நடப்பது எங்கள் ஆட்சி, நாங்கள் சொல்வது தான்.
உன்னால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. இது போன்ற பதிவுகளை சமூக வலைதளங்கள் நீங்கள் போடக்கூடாது. இப்படி பதிவு போட்டவர்கள் என்ன ஆவார்கள் என்பது தெரியும் தான்” என்று கொலை மிரட்டும் விடுக்கும் வகையில் பேசியுள்ளார் ஜெகன்.